சிவகங்கை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் 25-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு: முககவசம், சமூக இடைவெளியை பக்தர்கள் பின்பற்ற அறிவுரை
பெருமாள் கோவில்களில் 25-ந்தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அப்போது கொரோனா காரணமாக தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சொர்க்கவாசல் திறப்பு
சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பத்தூர் அருகே சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் மற்றும் காரைக்குடியை அடுத்த அரியக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட திருவேங்கடமுடையான் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி தினந்தன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
இந்தாண்டு கொரோனா தொற்று காலமாக இருப்பதால் தமிழக அரசு அறிவித்த விதிமுறைகளுக்குட்பட்டு வருகிற 25-ந்தேதி அன்று வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்று காலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் புறப்பாடு மற்றும் நம்மாழ்வார் மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தொடர்ந்து பெருமாள் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அச்சமயம் காலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
திருக்கோஷ்டியூர் கோவில்
மேலும் அன்றைய தினம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும். கோவிலில் உள்ளே நுழையும் போது பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் கைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்ட பின்னர் போதிய சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி நேற்று முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து வருகிற 25-ந்தேதி அன்று இரவு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அச்சமயம் சவுமியநாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியடன் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தற்சமயம் கொரோனா காலக்கட்டம் என்பதால் இந்தாண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விரைந்து முடிக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அன்று கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் சென்று தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story