டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: நெல்லையில் சாலை மறியலுக்கு முயன்ற 55 பேர் கைது
டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நெல்லையில் சாலை மறியலுக்கு முயன்ற 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களை பாதிக்கும் மின்சார திருத்த சட்டம் 2020-ஐ கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அரசியல் கட்சியினர் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் தலைமையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், விவசாயிகள் சங்க தலைவர் ராஜகுரு, விவசாயிகள் சங்க மகாசபை நிர்வாகி கருப்பசாமி, சி.ஐ.டி.யு. நிர்வாகி சுடலைராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நிஜாம் (மாநகர்), உவரி டைமண்ட் (புறநகர்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் நல்லதம்பி, மாவட்ட குழு உறுப்பினர் ராமலிங்கம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு நிர்வாகிகள் சங்கரபாண்டியன், கணேசன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ஜான் பிரிட்டோ, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், பத்மநாபன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story