வைகுண்ட ஏகாதசி விழா: வரதராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து நிகழ்ச்சி தொடங்கியது
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி புதுக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து நிகழ்ச்சி தொடங்கியது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. வழக்கமாக உற்சவர் புறப்பாடு கோவில் வெளிப்பிரகாரத்தில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சாமி புறப்பாடு கோவில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது.
பகல் பத்து முதல்நாளான நேற்று மாலை 4.30 மணி அளவில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மூலவர் மற்றும் சக்கரத்தாழ்வார், தாயார் சன்னதிகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பகல் பத்து நிகழ்ச்சி தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
சொர்க்கவாசல்
வருகிற 25-ந் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மார்கழி மாத பிறப்பையொட்டி இன்று (புதன்கிழமை) அதிகாலை கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story