தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையத்தில் உறுப்பு கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையத்தில் உறுப்பு கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி
x
தினத்தந்தி 16 Dec 2020 8:42 AM IST (Updated: 16 Dec 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையத்தில் உறுப்பு கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியை துணைவேந்தர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாய கல்லூரியின் கீழ் செயல்படும் கல்லூரிகளை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று விழுப்புரத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது.

பயிற்சிக்கு மண்டல இயக்குனர் பாண்டியவடிவு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மீனாம்பிகை அனைவரையும் வரவேற்றார். திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர் விழுப்புரம் மண்டல மையத்தின் கையேட்டை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

உயர்கல்வி பயில

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மற்றும் அடித்தட்டு மக்கள் இன்றைய நிலையிலும் கூட உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில்தான் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதும் 8 மண்டல மையங்களை நிறுவியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் எழுத்தறிவு விகிதத்தில் பின்தங்கியுள்ளதால் உயர்கல்வி எட்டாக்கனியாக இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும், பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு உயர்கல்வியை வழங்கிடும் வகையில் விழுப்புரம் மண்டல மையம் உருவாக்கப்பட்டது. இம்மையத்தின் மூலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி பகுதியை சேர்ந்த மாணவர்களும் கல்வி பயில ஏதுவாக உள்ளது.

தமிழகத்தில் தற்போது உள்ள 91 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க இயலாதவர்கள், அதே கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் பயிலலாம். இந்த பல்கலைக்கழகம் மட்டுமே இந்தியாவில் அதிகமாக 80 பாடங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தொலைதூர கல்வி மன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள 15 திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் இப்பல்கலைக்கழகம் 5-வது இடத்தை பெற்றுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 8 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் மொத்தம் 10 ஆயிரம் மாணவர்களை இப்பல்கலைக்கழகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Next Story