கேரள தங்க கடத்தல் விவகாரம்: கோவை நகை வியாபாரிகள் 3 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கோவையில் நகை வியாபாரிகள் 3 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் கடத்திய 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்களான சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் பெரும் அரசியல் புயலை கிளப்பிய தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தங்கம் கடத்தலில் கைதாகி உள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் வழியாகவும் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் கருதினர். அதன்படி கோவையில் தங்க நகை பட்டறை நடத்தி வரும் நந்தகுமார் (வயது 43) என்பவர் கடத்தல் தங்கத்தை ஆபரணங்களாக மாற்றி கொடுத்தது என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை வந்து நந்தகுமாரின் வீடு மற்றும் நகை பட்டறைகளில் சோதனை நடத்தினர். அங்கு அவர்கள் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நந்தகுமாரை கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே நந்தகுமார், அப்ரூவராக மாறுவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிது.
என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்வதற்காக அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் தன்னுடன் தொடர்பில் இருந்ததாக கோவை பெரியகடைவீதியை சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் 3 பேரின் பெயர் விவரங்களை தெரிவித்துள்ளார். அதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக கேரள என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அந்த 3 பேரையும் ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து வந்து அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கோவையில் 3 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story