திருப்பத்தூரில், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் - கலெக்டர் வழங்கினார்


திருப்பத்தூரில், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Dec 2020 4:10 PM IST (Updated: 16 Dec 2020 4:10 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் நடந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் சிவன்அருள் உதவி உபகரணங்கள் வழங்கினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார்.

முகாமில் 293 நபர்கள் கலந்து கொண்டனர். 164 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக தேசிய அடையாள அட்டை புத்தகங்களையும், 2 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலி, 2 நபர்களுக்கு காதொலி கருவிகளும், 50 நபர்களுக்கு ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டையும் கலெக்டர் வழங்கி பேசினார்.

அப்போது மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள், நவீன உபகரணங்கள் என பல்வேறு உதவிகளை வழங்குவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. அனைத்து மாற்றுத் திறனாளிகளும் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த 9 மாதங்களாக இம்முகாம் நடத்தப்படாமல் இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்ற நோக்கில் தற்போது முகாம் நடத்தப்படுகிறது. இன்று வர முடியாதவர்கள் மற்ற நாட்களில் நடக்கும் முகாமிற்கு வந்து பயன்பெறலாம் என்றார்.

முகாமில் முதியோர் மாதாந்திர உதவித்தொகை கேட்டு 33 பேரும், ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை வேண்டி 105 நபர்கள் மனுக்களை வழங்கினர்.

முகாமில் உதவி கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், தாசில்தார் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story