மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கிரைண்டர், மோட்டார்களுடன் வந்து தொழில் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கிரைண்டர், மோட்டார்களுடன் வந்து தொழில் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2020 5:09 PM IST (Updated: 16 Dec 2020 5:09 PM IST)
t-max-icont-min-icon

மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கிரைண்டர், மோட்டார்களுடன் வந்து தொழில் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், இரும்பு, செம்பு இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் (போசியா) கிரைண்டர், மோட்டார்களுடன் வந்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜேம்ஸ் தலைமை தாங்கினார். சிவசண்முககுமார், சுருளிவேல், சவுந்தரகுமார், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜேம்ஸ் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு தொழில்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். குறு, சிறு தொழிலாளர்கள் தற்போது இரும்பு, செம்பு, அலுமினியம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மூலப்பொருட்களின் விலை உயரும்போது சொற்ப லாபத்தையும் இழந்து கடன் சுமையில் தள்ளப்படுகிறார்கள்.

எனவே மத்திய அரசு உடனடியாக மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த கண்காணிப்பு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். மூலப்பொருட்களுக்கு உயர்ந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும். இரும்பு, பிளாஸ்டிக் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். இரும்பு, செம்பு இறக்குமதிக்கு சுங்க வரியை விலக்க வேண்டும். அரசு துறை இரும்பு உற்பத்தி நிறுவனங்கள் குறு, சிறு தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் இரும்பு பொருட்களை வழங்க வேண்டும். அடிப்படை மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக ஒரு ஆண்டுக்கு குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சாகுல்ஹமீது, ரங்கராஜ், ரவீந்திரன், கீர்த்திகா, சுரேஷ், சுரேந்தர், நடராஜன், சதாசிவம், ரவி, அண்ணாமலை, சக்திவேல் உள்பட தொழில் அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story