வேளாண் வணிகத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் இடைமுக பணிமனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
வேளாண் வணிகத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் இடைமுக பணிமனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கோவை மாவட்ட தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் இடைமுக பணிமனை கூட்டம் கருத்தரங்கு வளாகத்தில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி, குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வேளாண் வணிக கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
உழவர்கள் நவீன வேளாண் வணிகத்தில் ஈடுபட்டு அதிக லாபம் அடைய வேண்டும் என்ற உயரிய இலக்கோடும் விவசாயிகளை சந்தை சார்ந்த வேளாண்மைக்கு ஊக்கப்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் உருவாகி வருகிறது. விவசாய விளைபொருள்களை மதிப்பு கூட்டுவதற்காக அறுவடை பின்செய் நேர்த்தி விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்தல் போன்ற திட்டங்களுக்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை, தனியார் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வலுவான வேலைவாய்ப்புகளை கண்டறிவதே பணிமனை கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கோவை மாவட்டத்தில் ரூ.37 கோடி செலவில் வேளாண் தரத்தை கூட்டுவதற்கு 7 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வனக்கல்லூரி முதல்வர் கே.டி.பார்த்திபன், கோவை வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி, கோவை தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி, மேட்டுப்பாளையம் வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் குமாரவடிவேல், சென்னை தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட வேளாண்மை ஆலோசகர் ராஜசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். முன்னதாக கோவை வேளாண் வணிக வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரவடிவேலு வரவேற்றார். முடிவில் வேளாண்மை அலுவலர் ஹில்டா நன்றி கூறினார். இடைமுக பணிமனை கூட்டம் 2-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story