நர்சிடம் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிய சிறுவன் உள்பட 2 பேரை விரட்டி பிடித்த போலீஸ்காரர் - வேடசந்தூர் அருகே சினிமா பாணியில் நடந்த சம்பவம்
வேடசந்தூர் அருகே நர்சிடம் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிய சிறுவன் உள்பட 2 பேரை, போலீஸ்காரர் ஒருவர் சினிமா பாணியில் காரில் விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் சுபலட்சுமி. இவர் குஜிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். சுபலட்சுமி நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தனது பணியை முடித்துவிட்டு, மொபட்டில் குஜிலியம்பாறை-எரியோடு சாலையில் புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் 2 பேர் வந்தனர்.
இந்தநிலையில் திடீரென்று அந்த நபர்கள், சுபலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துவிட்டு திண்டுக்கல் நோக்கி மின்னல் வேகத்தில் சென்றனர். நகையை பறித்தபோது நிலைகுலைந்த சுபலட்சுமி மொபட்டில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து உடனடியாக எரியோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் சுபலட்சுமியையும் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே நகை பறிப்பு குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ்காரர் குமரேசன், போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதை அவர் நிறுத்த முயன்றார். ஆனால் அதில் வந்த 2 பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அசுர வேகத்தில் சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த குமரேசன், ஒரு காரை எடுத்துக்கொண்டு அந்த நபர்களை பின்தொடர்ந்து சென்றார். சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவர் விரட்டிச்சென்ற நிலையில், குளத்தூர் ஆர்.வி.எஸ். கல்லூரி அருகே வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் மெதுவாக ஏறி இறங்கியது. அப்போது பின்னால் வந்த குமரேசன் தனது காரால் அந்த மோட்டார் சைக்கிளை மறித்தார். அதற்குள் மோட்டார் சைக்கிளை அங்கு போட்டுவிட்டு, அதில் வந்த 2 பேரும் தப்பியோட முயற்சித்தனர். இதனால் சுதாரித்து கொண்ட குமரேசன், அந்த 2 பேரையும் விரட்டி பிடித்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் எரியோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.நகரை சேர்ந்த வினோத்குமார் (வயது 24), மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இவர்கள் சுபலட்சுமியிடம் நகையை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த 2 பேரும் ஏற்கனவே குஜிலியம்பாறை அருகே கூடலூரில் பரமேஸ்வரி என்பவரிடம் 4 கிராம் தங்க நகையையும், அம்பாத்துரை அருகே பிள்ளையார்நத்தத்தில் கீதா என்பவரிடம் 2¼ பவுன் நகையையும் பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நர்சு சுபலட்சுமியிடம் கேட்டபோது, அது கவரிங் நகை என்று தெரிவித்தார்.
சினிமா பாணியில் நகையை பறித்து சென்றவர்களை போலீஸ்காரர் குமரேசன் காரில் விரட்டிச்சென்று பிடித்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story