நம்பிக்கை இல்லா தீர்மானம் எதிரொலி மேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி ராஜினாமா செய்ய முடிவு - சித்தராமையா எதிர்ப்பு
பா.ஜனதா நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால், மேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்தது. காங்கிரசை சேர்ந்த பிரதாப்சந்திர ஷெட்டி மேலவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த தர்மேகவுடா துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏறபட்டு பா.ஜனதா ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
மேல்-சபையில் ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் அரசு நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதையடுத்து மேல்-சபையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஆதரவை பெற்றுள்ள பா.ஜனதா, பிரதாப்சந்திரஷெட்டியை மேலவை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அவருக்கு எதிராக பா.ஜனதா நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தை மேலவை தலைவரிடம் வழங்கியது.
நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் இந்த தீர்மானத்தை அனுமதிக்குமாறு பா.ஜனதா கேட்டுக் கொண்டது. அந்த தீர்மானம் சட்டப்படி சரியாக இல்லை என்று கூறி மேலவை தலைவர் நிராகரித்துவிட்டார். இந்த நிலையில் கர்நாடக மேல்-சபையில் சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்க வேண்டும் என்று பா.ஜனதா கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக அந்த சபையில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வரலாறு காணாத ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மேலவை தலைவர், நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் பெற்றபோதே, பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் அவரை சித்தராமையா தடுத்ததாகவும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் சந்தர்ப்பவாத மற்றும் மதவாத நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்று அவரிடம் சித்தராமையா கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மேல்-சபையில் ரகளை ஏற்பட்டதை அடுத்து, 2-வது முறையாக பதவியை ராஜினாமா செய்ய பிரதாப்சந்திரஷெட்டி முன்வந்து இந்த தகவலை சித்தராமையாவிடம் தெரிவித்துள்ளார். அப்போதும் அதற்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மதசார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொள்ளும் ஜனதா தளம்(எஸ்) கட்சி, பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அதனால் அதுவரை பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்றும் சித்தராமையா மேலவை தலைவரிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக சட்ட போராட்டத்தை நடத்த காங்கிரஸ் தயாராக இருப்பதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story