தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது ரூ.1.15 கோடி போதைப்பொருட்கள், வாகனங்கள் பறிமுதல்


தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது ரூ.1.15 கோடி போதைப்பொருட்கள், வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Dec 2020 4:12 AM IST (Updated: 17 Dec 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் புத்தாண்டுக்கு போதைப்பொருள் விற்க திட்டமிட்ட தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.15 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரையும் கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கமலேசன் என்ற ராமமூர்த்தி (வயது 31), சதீஸ்குமார் என்ற சுப்பிரமணி (27), பெங்களூரு ஆர்.டி.நகரை சேர்ந்த அஜாஜ் பாஷா (45), ஹெப்பால் அருகே கெம்பாபுராவை சேர்ந்த திருபால் ரெட்டி (32) என்று தெரியவந்தது.

இவர்கள் 4 பேரும் ஆர்.டி.நகரில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைதான 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் கமிஷனர் கமல்பந்த், மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் பார்வையிட்டார்கள். பின்னர் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீட்டில் சோதனை நடத்திய போது, 5 கிலோ 600 கிராம் ஆசிஷ் ஆயில், 3 கிலோ 300 கிராம் கஞ்சா, ஒரு விலை உயர்ந்த கார், மோட்டார் சைக்கிள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி 15 லட்சம் ஆகும்.

கைதான 4 பேரும் போதைப்பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தனர். பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதைப்பொருட்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்காக விற்பனை செய்ய, அந்த போதைப்பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இவர்களை போன்று புத்தாண்டுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடுபவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story