பட்டப்படிப்பில் 2 வகையான பாடப்பிரிவுகளை படித்தவருக்கு, ஆசிரியர் பணி வழங்க மறுத்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை; காமராஜர் பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவு


மதுரை ஐகோர்ட்டு
x
மதுரை ஐகோர்ட்டு
தினத்தந்தி 17 Dec 2020 4:31 AM IST (Updated: 17 Dec 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

பட்டப்படிப்பில் 2 வகையான பாடப்பிரிவுகளை படித்து தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

2 வகையான பாடப்பிரிவு
மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாபு என்பவர் பி.எஸ்.சி. (கணிதம்) முதல் மற்றும் 2-ம் ஆண்டு வரை முடித்துள்ளார். பின்னர் 3-ம் ஆண்டு பி.ஏ. வரலாறு படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றுள்ளார். பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட் முடித்துள்ளார். பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றார். ஆனால், பணி வழங்காமல் நிராகரிக்கப்பட்டார். இதை எதிர்த்து பாபு தொடர்ந்த வழக்கில், அவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் மேல்முறையீடு 
செய்யப்பட்டது.

காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு கேள்வி
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வாணையம் சார்பில் ஆஜரான வக்கீல், ஆசிரியர் பணிக்கான தகுதி என்பது குறிப்பிட்ட பாடத்தை 3 ஆண்டுகள் முழுமையாக படித்திருக்க வேண்டும். இதை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

அப்போது நீதிபதிகள், பல்கலைக்கழகங்கள் எந்த அடிப்படையில் இப்படி செயல்படுகின்றன? வியாபார நோக்கத்தில் பாடங்கள் நடத்தக் கூடாது. இதுபோன்று படிக்க எப்படி அனுமதித்தனர்? இதற்கு யூ.ஜி.சி. 
அனுமதியளித்துள்ளதா என்பது குறித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், தனி நீதிபதியின் உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதித்தனர். பின்னர் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story