டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய போலீஸ் பஸ் மோதி சரக்கு வாகன டிரைவர் பலி 7 ஐ.ஆர்.பி.என். போலீசார் காயம்


டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய போலீஸ் பஸ் மோதி சரக்கு வாகன டிரைவர் பலி 7 ஐ.ஆர்.பி.என். போலீசார் காயம்
x
தினத்தந்தி 17 Dec 2020 5:32 AM IST (Updated: 17 Dec 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய போலீஸ் பஸ் மோதியதில் சரக்கு வாகன டிரைவர் பலியானார். 7 போலீசார் காயமடைந்தனர்.

வில்லியனூர், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கஞ்சனூரில் உள்ள பயிற்சி தளத்தில் புதுவை போலீசாருக்கு கடந்த 10-ந் தேதி முதல் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் 100 பேர் வீதம் கஞ்சனூர் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று காலை புதுவையில் இருந்து போலீஸ் பஸ்சில் ஐ.ஆர்.பி.என். போலீசார் சுமார் 40 பேர் புறப்பட்டனர். காலை 7 மணி அளவில் புதுச்சேரி -விழுப்புரம் சாலையில் வில்லியனூர் அருகே அரியூரில் சென்று கொண்டிருந்தபோது போலீஸ் பஸ்சின் முன்பக்க டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அந்த பஸ் தாறுமாறாக ஓடியது.

அப்போது கண்டமங்கலத்தில் இருந்து வில்லியனூர் நோக்கி கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றுவதற்காக வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது போலீஸ் பஸ் மோதியது. இதில் பஸ் மற்றும் சரக்கு வாகனத்தின் முன்பகுதிகள் அப்பளம்போல் நொறுங்கின.

இந்த விபத்தில் சரக்கு வாகன டிரைவரான கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 22) மற்றும் ஐ.ஆர்.பி.என். போலீசார் 7 பேர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சரக்கு வாகன டிரைவர் சிவக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். காயமடைந்த ஐ.ஆர்.பி.என். போலீசாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசாக காயமடைந்த மற்ற 5 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சேரி கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் ஐ.ஆர்.பி.என். போலீசாரை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் அரியூர் பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story