குடியிருப்புவாசிகளுக்கு வெவ்வேறு இடங்களில் வீடுகள் ஒதுக்கீடு: சென்னை பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு இடிக்கும் பணி மும்முரம்; விரைவில் வணிக வளாகம் கட்டப்படுகிறது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு இடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் அங்கு வணிக வளாகம் கட்டப்படுகிறது. பீட்டர்ஸ் காலனி குடியிருப்புவாசிகளுக்கு வெவ்வேறு இடங்களில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு
சென்னையில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் குறைந்த வாடகை அடிப்படையில் குடியிருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பழுதடைந்த நிலையில் உள்ள குடியிருப்புகளை இடித்து புதிய குடியிருப்புகள் கட்ட கடந்த 2013-ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. அதன்படி ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி, தாடண்டர் நகர், ஆர்.கே.மடம் குடியிருப்பு, மந்தைவெளி பாக்கம், என்.ஜி.ஓ. காலனி, பி.வி.ஆர்.சாலை, அசோகா காலனி, அண்ணாநகர் கிழக்கு, திருமங்கலம், வெங்கடாபுரம், கே.ஜி.காலனி, எம்.கே.பி.நகர் உள்பட 17 இடங்களில் உள்ள குடியிருப்புகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு
இதில் பல இடங்களில் பணிகள் முடிவடைந்த நிலையில் ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் உள்ள குடியிருப்பு மட்டும் இடிக்கப்படாமல் இருந்து வந்தது. இங்குள்ள 346 குடியிருப்புகளில் அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொது ஒதுக்கீட்டில் பொதுமக்களும் வசித்து வந்தனர். ஐகோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் இக்குடியிருப்பை இடிப்பதில் சிக்கல் நீடித்தது.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு இடிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக நில அளவை பணிகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து அங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
பீட்டர்ஸ் காலனியில் குடியிருந்தவர்களுக்கு பாடிகுப்பம், திருமங்கலம், அயனாவரம் பராக்கா சாலை, லாயிட்ஸ் காலனி, சாந்தி காலனி, எம்.கே.பி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
விரைவில் வணிக வளாகம்
இதையடுத்து கடந்த 1972-ம் ஆண்டு கட்டப்பட்ட பீட்டர்ஸ் காலனி குடியிருப்பை இடிக்கும் பணி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இன்னும் இந்த குடியிருப்பில் ஒரு சிலர் மட்டுமே தங்கியுள்ளனர். ஓரிரு நாளில் அவர்களும் வெளியேற இருக்கிறார்கள். அந்தவகையில் குடியிருப்பு முழுவதும் இடிக்கும் பணி இந்த மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்திலோ முடிவடையும் என வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டு, மீண்டும் நில அளவை பணி நடத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து அரசு ஏற்கனவே அறிவித்தபடி விரைவில் வணிக வளாகம் கட்டும் பணி முன்னெடுக்கப்படும் என்றும், இதுதொடர்பான அறிவிப்பு அரசு சார்பில் அறிவிக்கப்படும் என்றும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story