சட்டமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடு பணிகள்: மராட்டியத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு லாரியில் வரும் வாக்குப்பதிவு எந்திரங்கள்
சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் பிரிவினர் தொடங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு லாரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகின்றன.
புதுக்கோட்டை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பே தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். ஆனால் அதற்கு முன்பாகவே தற்போது தேர்தல் பரபரப்பு தொடங்கி உள்ளது. ஒரு சில அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு முன்பாகவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். மேலும் வெற்றி வாய்ப்பு குறித்தும், தொகுதிகளில் கள நிலவரங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தேர்தல் பிரிவு அதிகாரிகளும் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா கால கட்டமாக இருந்தாலும் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டது.
இதேபோல, நடத்தப்பட வேண்டிய தேர்தல்களும் நடத்தப்படும் என ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்தவகையில் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் தங்களது தரப்பிலான பணிகளை தொடங்கி சத்தம் இல்லாமல் செயல்பட தொடங்கி விட்டனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி சுருக்க முறை திருத்த பணிகள் நடந்து முடிந்த பின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தயாராகி வருகிறது.
வாக்குச்சாவடி மையங்கள்
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் பிரிவினர் தொடங்கி விட்டனர். மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 1,547 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்லைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 843 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 928 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கைகள் தற்போதைய நிலவரப்படியாகும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் வாக்காளர்கள் எண்ணிக்கையை கொண்டு வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தலில் பயன்படுத்தப்படக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.
கன்டெய்னர் லாரி
இதற்கிடையில் தேர்தல் பயன்பாட்டிற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது கன்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யக்கூடிய கருவியான வி.வி.பேட் எந்திரமும் வர உள்ளது. இதனை பெறுவதற்காக புதுக்கோட்டையில் இருந்து அதிகாரிகள் சென்றுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் இந்த எந்திரங்கள் வர உள்ளது. வருகிற 20-ந் தேதி இந்த எந்திரங்கள் புதுக்கோட்டை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே போதுமான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கன்ட்ரோல் யூனிட்டுகள், வி.வி.பேட் எந்திரங்களும் இருப்பதாகவும், தற்போது வருகை கூடுதல் பயன்பாட்டிற்கு முன்னேற்பாடாக என கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story