புதுவையில் பலத்த மழை; சாலைகளில் தேங்கிய வெள்ளம் பாகூர் பகுதியில் 200 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
புதுவையில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
புதுச்சேரி,
நிவர், புரெவி புயலால் புதுவையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் சேதம் அடைந்தன. ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. புயல் மழை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் வானிலை எச்சரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய சாரல் மழை பெய்தபடி இருந்தது. நேற்று காலையிலும் இது தொடர்ந்தது. பகல் 11 மணி வரை வெயில் முகம் காட்ட மறுத்ததால் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. மதியம் 1 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 3.30 மணிவரை விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது. அதன்பிறகு வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
இதனால் புதுவை நகர சாலைகளில் வழக்கம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகள் மதியம் 1 மணிக்கு முடிந்ததால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு சென்றனர். புஸ்சிவீதி, கடற்கரை சாலை, முதலியார்பேட்டை, ரெயின்போநகர், பாவாணர் நகர், இந்திராகாந்தி சிலை சதுக்கம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி யது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் அதில் மிதந்து ஊர்ந்தபடி சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
ரெயின்போ நகர் உள்ளிட்ட பல இடங்களில் தேங்கி கிடந்த தண்ணீரை நகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார்கள் மூலம் உடனுக்குடன் வெளியேற்றி அப்புறப்படுத்தியதால் தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து இரவிலும் மழை பெய்தபடி இருந்தது.
நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையிலான நிலவரப்படி புதுவையில் 3 செ.மீ. மழை பதிவானது.
திருபுவனை அருகே திருபுவனைபாளையம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் சாந்தி (வயது 59). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகன், மகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து, வெளிப்புறமாக விழுந்தது.
இந்த சத்தம்கேட்டு சாந்தி மற்றும் அவரது மகன், மகள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். வீட்டின் சுவர் வெளிப்புறமாக விழுந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
, கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்ய தொடங்கிய மழை நேற்று இரவு வரை விடாது பெய்தது. இதனால் மீண்டும் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. வாய்க்கால்களிலும், தெருக்களிலும் மழை தேங்கி உள்ளது. கடலூர்- பாண்டி மெயின்ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கந்தன்பேட் புதுநகர், கன்னியகோவில் ரத்னா நகரில் உள்ள வீடுகளில் மீண்டும் தண்ணீர் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தும், மழைநீர் தேங்கியும் அவதிக்குள்ளாகினர்.
Related Tags :
Next Story