ஆண்டிப்பட்டியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தீவிரம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆண்டிப்பட்டியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டிப்பட்டி,
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. அடுத்தகட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்யும் பணி தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 23 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு பெட்டிகளின் தரம் குறித்து சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆண்டிப்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவற்றை சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.
முதற்கட்டமாக இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், தேனி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு எந்திரங்களும் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் 783 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 238 கட்டுப்பாட்டு கருவிகளும், வாக்குப்பதிவை உறுதி செய்யும் 179 கருவிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு, பேட்டரியின் செயல்பாடு ஆகியவை சோதனை செய்யப்பட்டது. இந்த பணிகளில் பெங்களூருவை சேர்ந்த பெல் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதுதவிர ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது பதிவான வாக்குகளை அழிக்கும் பணியும் நடைபெற்றது. அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்றன. முன்னதாக வாக்குப்பதிவு எந்திரங்களின் தரத்தை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றதால், ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்குள் சென்றவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இந்த பணிகள் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story