செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு


செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
x
தினத்தந்தி 17 Dec 2020 6:35 AM IST (Updated: 17 Dec 2020 6:35 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சாவு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 41). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இவர் ஊரப்பாக்கம் அருகே சாலையை கடக்கும்போது கார் மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மற்றொரு விபத்து
சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண் ரமேஷ் (19), இவர் திருச்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா தொற்று காலத்தில் கல்லூரி மூடப்பட்டு இருப்பதால் வண்டலூர் அருகே உள்ள தாழம்பூர் பகுதியில் உள்ள கார் பழுது பார்க்கும் மையத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் நல்லம்பாக்கம் கூட்ரோடு அருகே செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் ரமேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண் ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் ஒரு விபத்து
காஞ்சீபுரத்தை அடுத்த திருப்புட்குழி, திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (57). நெசவு தொழிலாளி. இவர் தனது உறவினரின் மகனான விஜயகவினை (13) அழைத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து திருப்புட்குழி நோக்கி சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி ஜங்ஷன் என்ற இடத்தில் இவர்கள் சென்றபோது வேலூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த ஒரு தனியார் நிறுவன பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மூர்த்தி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் விஜயகவின் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, மோதிய தனியார் நிறுவன பஸ்சை பறிமுதல் செய்து பஸ் டிரைவரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் (25) என்பவரை கைது செய்தனர்.

Next Story