சட்டசபை தேர்தலுக்காக மராட்டியத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைப்பு
சட்டசபை தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்திற்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்படுகிறது.
திருச்சி,
திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.4 கோடியே 29 லட்சம் செலவில் புதிதாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி பாதுகாப்புக்கிடங்கு புதிய கட்டிடத்தை கலெக்டர் எஸ்.சிவராசு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இப்பணி, வருகிற ஜனவரி மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.
மராட்டியத்தில் இருந்து வருகை
இந்திய தேர்தல் ஆணையத்தால், நமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மராட்டிய மாநிலத்திலிருந்து வர உள்ளது. அனேகமாக வருகிற 20-ந்தேதி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,535 வாக்குச்சாவடிகள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் 1,220, கண்ட்ரோல் யூனிட் 3,490-ம் மற்றும் யாருக்கு வாக்களிக்கிறோம் என கண்டறியும் வி.வி.பேட் எந்திரம் 4,560-ம் வர உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
கண்காணிப்பு கேமரா
பாதுகாப்பு அறையில் மின்விசிறி, ஜன்னல் கிடையாது. வெண்டிலேட்டர் மட்டும் அமைக்கப்படும். மின் விளக்குகளுக்கு ஒரே சுவிட்ச் மட்டும் இருக்கும். மேலும் கட்டிடத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டும் வரும் பேரரசர் பெரும்பிடு முத்தரையர், ஏ.டி.பன்னீர் செல்வம் மற்றும் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் மற்றும் நூலகம் கட்டும் பணிகளை கலெக்டர் எஸ்.சிவராசு பார்வையிட்டார்.
Related Tags :
Next Story