திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 2 ஆண்டுகளுக்கு பின் புதிய சான்றிதழ் கேட்பது ஏன்? விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை


திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 2 ஆண்டுகளுக்கு பின் புதிய சான்றிதழ் கேட்பது ஏன்? விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2020 8:15 AM IST (Updated: 17 Dec 2020 8:15 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்த பெண்களுக்கு இன்னும் நிதியுதவி வழங்கப்படாத நிலையில் புதிதாக திருமண சான்றிதழ் கேட்கும் நிலை உள்ளதால் விண்ணப்பதாரர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருமண நிதி உதவித்திட்டம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண் கல்வி முக்கியம் கருதி படித்த ஏழை, எளிய பெண்களுக்கு திருமணத்திற்காக நிதி உதவியுடன் தாலிக்கு தங்கமும் வழங்கினார்.

பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவியும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. இதனால் எண்ணற்ற பெண்கள் அதிலும் குறிப்பாக கிராமப்புற பெண்கள் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததுடன் திருமணம் ஆகும் வாய்ப்ைபயும் பெற்றனர்.

காத்திருக்கும் நிலை
ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் திருமண நிதியுதவி கேட்டு விண்ணப்பித்த ஏழை, எளிய பெண்களுக்கு இதுவரை நிதி உதவி வழங்கப்படவில்லை. காரணங்களை முறையாக தெரிவிக்காத நிலையில் ஏழை, எளிய பெண்கள் பலர் இத்திட்டத்தின் கீழான திருமண நிதியுதவி எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல், கொரோனா ஊரடங்கு என பல்வேறு நிகழ்வுகளால் நிதியுதவி கிடைப்பதில் தாமதம் நீடித்தது.

சான்றிதழ்
இதற்கிடையில் விண்ணப்பித்து 2 ஆண்டுகளுக்கு பின்பு சமூக நலத்துறை அதிகாரிகள் விண்ணப்பதாரர்கள் இடம் முதல் திருமண சான்றிதழ் சமர்ப்பித்தால் தான் நிதி உதவி கிடைக்க பரிந்துரைக்கப்படும் என கூறும் நிலை உள்ளது.

விதிமுறைப்படி திருமண நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச்சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை மட்டுமே சமூக நலத்துறை அலுவலர்கள் கேட்டுப்பெற்று உள்ளனர். ஆனால் தற்போது விதிமுறைகளுக்கு முரணாக முதல் திருமண சான்றிதழ் கேட்பதால் விண்ணப்பதாரர்கள் பலர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தாலிக்கு தங்கம்
இப்பிரச்சினை குறித்து மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் இடம் கேட்டபோது தணிக்கை அதிகாரி கேட்பதால் முதல் திருமண சான்றிதழ் விண்ணப்பதார்களிடம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் விண்ணப்பிக்கும் போது ஒரு திருமண சான்றிதழை இணைக்க வேண்டும் என கேட்காதது ஏன்? என்று கேட்டபோது அதற்கு முறையாக விளக்கம் அளிக்கத் தயாராக இல்லை. விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விதிமுறைகளுக்கு முரணாக திருமண நிதியுதவி கேட்டு விண்ணப்பித்துள்ள பெண்களிடம் தற்போது முதல் திருமண சான்றிதழ் பெறும் நடவடிக்கையை கைவிட மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவதுடன் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story