கோர்ட்டு உத்தரவுப்படி ஜீவனாம்சம் தராததால் கணவர் வீட்டு முன்பு அமர்ந்து மகனுடன் பெண் தர்ணா
கோர்ட்டு உத்தரவுப்படி ஜீவனாம்சம் தராததால் கணவர் வீட்டு முன்பு மகனுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சை பூக்கார வடக்கு லாயத்தை சேர்ந்தவர் பரமேஷ்குமார் (வயது45). இவர் வீட்டின் அருகே உள்ள கடையில் டைல்ஸ், கம்பி மற்றும் சிமெண்டு விற்பனை செய்து வந்தார். இவருக்கும் தஞ்சை கண்டிதம்பட்டு கிழக்குத்தெருவை சேர்ந்த சுமதி (37) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது யோகேஸ்வரன் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு காரணமாக பிரிந்து வசித்து வருகிறார்கள். பரமேஷ்குமார் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சுமதி தனது மகனுடன், பூக்கார வடக்கு லாயத்தில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு வந்தார். அவர் வீட்டிற்குள் செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
வீட்டின் முன்பு தர்ணா
பின்னர் வீட்டிற்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பரமேஷ்குமாரின் குடும்பத்தினருக்கும், சுமதி மற்றும் அவர்களின் உறவினர்களுக்கும் இடையே வாய்த்தகராறு, கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல்அறிந்ததும் தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து சுமதி கூறுகையில், ‘‘எனக்கு திருமணத்தின் போது 25 பவுன் நகையும், கணவருக்கு 5 பவுன் நகையும், எனது மகனுக்கு 4 பவுன் நகையும் போட்டனர். ரூ.1½ லட்சத்திற்கு சீர்வரிசை பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கமும் வழங்கினர். இந்த நிலையில் தொடர்ந்து எனது பெற்றோரிடம் பணமும், நகையும் வாங்கி வர வேண்டும் என்று கூறி தகராறு செய்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள்.
ஜீவனாம்சம்
இது தொடர்பாக தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளேன். இந்த நிலையில் விவாகரத்து வேண்டும் எனது கணவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதில் எனக்கு இடைக்கால ஜீவனாம்சம் மாதம் ரூ.6 ஆயிரம் தர வேண்டும் என உத்தரவிட்டது. சில மாதம் கொடுத்து விட்டு பின்னர் தரவில்லை. எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. மேலும் எனக்கு எனது பெற்றோர் கொடுத்த 34 பவுன் நகையையும் தர மறுக்கிறார்கள். போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஜீவனாம்சம் தரக்கோரியும், நகையை தரக்கோரியும் கேட்பதற்காக வந்தேன். ஆனால் என்னையும், எனது உடன் வந்தவர்கள், மகனையும் தாக்கியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்’’என்றார்.
Related Tags :
Next Story