வெளியில் இருந்து வரும் உணவை சாப்பிட மறுப்பு: ‘நானே சமைத்து சாப்பிடுவேன்’ என முருகன் அடம்பிடிப்பு


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன்
x
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன்
தினத்தந்தி 17 Dec 2020 5:28 AM GMT (Updated: 17 Dec 2020 5:28 AM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வெளியில் இருந்து வரும் உணவை சாப்பிட மறுப்பதுடன், நானே சமைத்து சாப்பிடுவேன் என்று அடம்பிடித்து வருகிறார்.

முருகன் உண்ணாவிரதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயில் உள்ளார். இவர் செல்போன் வாட்ஸ் அப்பில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது உடல் மிகவும் சோர்வடைந்து இருந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு திடீரென முருகன் மிகவும் சோர்வடைந்தார்.

அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 30 நிமிட பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் அவர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் முருகனுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

நானே சமைத்து சாப்பிடுவேன்
அதையடுத்து அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தற்போது பொது மருத்துவ வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு முருகன் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலையில் முருகனுக்கு மீண்டும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவை பரிசோதித்தனர். அவர் ஓ.ஆர்.எஸ். கரைசல் தண்ணீர் மட்டுமே குடித்து வருகிறார். காலை முதல் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்ததுடன், அடிக்கடி தியானம் செய்து வருகிறார். வெளியில் உள்ள உணவு எதையும் நான் சாப்பிட மாட்டேன். தரமான பொருட்கள் கொடுத்தால் நானே சமைத்து சாப்பிடுவேன். வேறு யார் கொடுத்தாலும் சாப்பிட மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து முருகன் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

உடல்நிலை சீராக உள்ளது
முருகன் சிகிச்சை பெறுவதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டீன் செல்வியிடம் கேட்டபோது, முருகனுக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டது. அவருக்கு உடல்நிலை சீராக உள்ளதாக பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. உடல் சோர்வுடன் காணப்படுவதால் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.

Next Story