வேதாரண்யத்தில் ரூ.96¾ கோடியில் வேதா ஜவுளி பூங்கா திருப்பூர் தொழில் துறையினருக்கு கைத்தறித்துறை அமைச்சர் அழைப்பு
வேதாரண்யத்தில் ரூ.96¾ கோடியில் வேதா ஜவுளி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இங்கு தொழில் தொடங்குவதற்கு திருப்பூர் தொழில் துறையினர் வரவேண்டுமென்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அழைப்பு விடுத்தார்.
திருப்பூர்,
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆயக்காரன்புலம் 4-ம் சேத்தி கிராமத்தில் வேதா ஆயத்த ஆடை பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் ஜவுளிப்பூங்காவில் முதல் கட்டமாக 36 தொழில் நிறுவனங்களை தொடங்க இருக்கிறார்கள்.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டம் மற்றும் எம்.எஸ்.எம்.இ. திட்டத்தின் கீழ் ரூ.96 கோடியே 86 லட்சம் மதிப்பில் இந்த பூங்கா அமைப்பதற்கான விரிவான செயல் திட்ட அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் 63 சதவீத மானியத்துடன் இந்த தொழில் பூங்கா விரைவில் அமைய இருக்கிறது.
கலந்தாய்வு கூட்டம்
இதைத்தொடர்ந்து வேதா ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பான தொழில் துறையினருடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குனர் கருணாகரன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் பிரவீன் பி.நாயர் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
36 தொழிற்சாலைகள்
கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் தொழில் துறையை மேம்படுத்தும் வகையில் அதிகப்படியான தொழில் முதலீடுகளை தமிழகம் பெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் திருப்பூர் மாவட்டத்திற்கு வந்து ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள். பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக இந்த தொழிலாளர்கள் சில காலம் பணிபுரிந்து விட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்புகிறார்கள்.
அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆயத்த ஆடை பூங்கா வேதாரண்யத்தில் அமைக்கப்பட இருக்கிறது. முதல்கட்டமாக 116 ஏக்கர் தயார் செய்யப்பட்டு 36 தொழிற்சாலைகள் அமைய உள்ளது.
தையல் பயிற்சி
இங்கு அமைக்கப்படும் தொழில் பூங்காவுக்கு தேவையான சலுகைகள், வசதிகள் சட்டப்படி அரசு சார்பில் பெற்று கொடுக்கப்படும். இந்த தொழில் பூங்காவில் தொழில் நிறுவனங்களை அமைத்து தொழில் தொடங்க அழைக்கிறோம். நாகப்பட்டினம் பகுதியிலுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் ஆயத்த ஆடை தையல் பயிற்சி வகுப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடங்கள் மூன்று இடங்களில் தயார் நிலையில் உள்ளது. வாடகை இல்லாமல் அந்த கட்டிடத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அளவில் ஒரு முன்னோடித் திட்டமாக இது தொடங்கப்பட இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேதா ஜவுளி பூங்கா திட்ட தலைவர் முத்துரத்தினம் பேசும்போது “ திருப்பூரில் 50 சதவீதம் தொழிலாளர் பற்றாக்குறை இருக்கிறது. ஆர்டர்கள் அதிகமாக உள்ளது. குறித்த நேரத்தில் ஆர்டர்களை முடித்து கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று தொழிலாளர்களை திருப்பூருக்கு அழைத்துவந்து தொழில் நிறுவனங்களில் பணி அமர்த்தி வேலை செய்துவருகிறோம். இருப்பினும் தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டத்துக்கு சென்று தொழில் நிறுவனங்கள் தொடங்க தமிழக அரசு விரைந்து அனுமதி செய்து கொடுத்ததற்கு நன்றி” என்றார்.
நில ஒப்படைப்பு ஆணை
முன்னதாக வேதா ஜவுளி பூங்கா அமைப்பதற்காக 36 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தின் ஒப்படைப்பு ஆணையை அமைச்சர், தொழில் துறையினரிடம் வழங்கினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), தனியரசு (காங்கேயம்), சிவசுப்பிரமணியம் (மொடக்குறிச்சி) , முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குனர் தமிழரசி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் ஆனந்தன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார், சைமா சங்க செயலாளர் பொன்னுசாமி மற்றும் தொழில் துறையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story