தர்மபுரியில் 3-வது நாளாக விவசாயிகள் கூட்டமைப்பினர் காத்திருக்கும் போராட்டம் - 65 பேர் கைது
தர்மபுரியில் 3-வது நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்மபுரி தொலைபேசி அலுவலகம் முன்பு நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, மாரிமுத்து, ராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டதலைவர் மல்லையன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், நகர செயலாளர் வஜ்ரவேல், அகில இந்திய விவசாயிகள் மஞ்ச் இயக்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரதாபன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்ட மசோதா ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டத்தில் வலியுறுத்தும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த காத்திருப்பு போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 65 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story