திண்டிவனம் அருகே, அடுத்தடுத்து விபத்து; மூதாட்டி பலி - 6 பேர் காயம்
திண்டிவனம் அருகே அடுத்தடுத்து நடந்த விபத்தில் மூதாட்டி இறந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
திண்டிவனம்,
அரியலூர் மாவட்டம் முத்துசேர்வமடம் புதுகாலனி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது37). டிரைவரான இவர் தனது மனைவி ஜெயமாலினி(34), அதே பகுதியை சேர்ந்த சங்கர்(43), இவருடைய மனைவி நீலா(34), மகள் சரண்யா(13), பட்டுசாமி(55) ஆகியோருடன் தனது சரக்கு வாகனத்தில் நேற்று காலை விழுப்புரம் வழியாக மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த சலவாதி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு சாலையோரம் நின்றிருந்த சலவாதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ் மனைவி வள்ளியம்மாள்(75) மீது சரக்கு வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது சரக்கு வாகனத்தின் பின்னால் வந்த டேங்கர் லாரி ஒன்று, சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த டிரைவர் பன்னீர்செல்வம் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ரோஷணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த பன்னீர்செல்வம் உள்பட 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்தில் பலியான வள்ளியம்மாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story