2 மணி நேரத்தில் 5 செ.மீ. கொட்டியது: கடலூர் மக்களை மீண்டும் மிரட்டும் மழை - வெள்ளம் வடிந்த பகுதியில் தண்ணீர் தேங்க தொடங்கியது
2 மணி நேரத்தில் கடலூரில் 5 செ.மீ. மழை கொட்டியதுடன், மக்களை மீண்டும் மிரட்டி வருகிறது. தொடர் மழையால் வெள்ளம் வடிந்த பகுதியில் மீண்டும் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது.
கடலூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் தீவிரம் காட்டாத மழை, கடந்த மாதம் இறுதியில் தீவிரம் அடைந்தது. வங்க கடலில் அடுத்தடுத்து உருவான நிவர், புரெவி புயல்கள் நல்ல மழையை கொடுத்து சென்றது.
இதில் கடலூர் மாவட்டத்தில் அடித்து ஊற்றிய மழையால் மாவட்டமே வெள்ளக்காடானது. குடியிருப்புகளும் வெள்ள நீரில் மிதந்தன. தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். பெரும் பயிர் சேதத்தை ஏற்படுத்தி மாவட்ட விவசாயிகளையும் ஒரு கை பார்த்து சென்றன. இந்த புயல்கள். மாவட்டத்தை விடாமல் துரத்திய மழை கடந்த 7-ந்தேதிக்கு பின்னர் சற்று ஓய்ந்தது. இதனால் மக்களும் நிம்மதியடைந்தனர்.
இதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வறண்ட வானிலையே நீடித்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. அதே வேளையில் இரவில் பனியின் தாக்கமும் அதிகமாக காணப்பட்டது.
ஐப்பசி அடைமழை கார்த்திகை கனமழை என்று பழமொழி சொல்வார்கள். அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரும் மெல்ல மெல்ல வடிய தொடங்கியது. முகாம்களில் இருந்த மக்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பியதுடன், இயல்பு வாழ்க்கைக்கும் மெல்ல திரும்பி வந்தார்கள்.
இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 16-ந்தேதி முதல் (அதாவது நேற்று) 19-ந்தேதி வரை மிதமானது முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடலூரில் கடந்த ஒருவாரமாக நீடித்த வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை இடைவிடாது சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது.
அதாவது, அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மட்டும் 2 மணி நேரத்தில் 5 செ.மீ. மழை கடலூரில் பதிவானது. இதனால் காலை பொழுது வானில் கருமேக கூட்டங்கள் நிறைந்து, மழைதூறலுடன் விடிந்ததுடன், மீண்டும் கடலூர் நகர மக்களை மழை மிரட்டியது.
அவ்வப்போது ஓய்வெடுத்து மழை பெய்த வண்ணம் இருந்தது. இரவு வரையிலும் விட்டு, விட்டு பெய்த கனமழையால் குடியிருப்புபகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்க தொடங்கியது. கடலூர் நகரில் ஏராளமான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் மோட்டார் மூலம் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதோடு ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் இருந்து விவசாயிகள் தண்ணீரை வடியவைத்து வந்த நிலையில், இடைவிடாது பெய்த இந்த மழையால் அவர்கள் மேலும் வேதனைக்கு உள்ளானார்கள். மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் நிலைமை மேலும் மோசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், வடலூர், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் விருத்தாசலம், பண்ருட்டி பகுதிகளிலும் மழை நீடித்தது.
நேற்று அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலான 2 மணி நேரத்தில் மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வானமாதேவி -32
பண்ருட்டி -27
கொத்தவாச்சேரி -22
புவனகிரி -14
குறிஞ்சிப்பாடி -14
குப்பநத்தம் -13.6
பரங்கிப்பேட்டை -12.4
சேத்தியாத்தோப்பு -10
வடக்குத்து -9
அண்ணாமலைநகர் -7.8
சிதம்பரம் -6.2
ஸ்ரீமுஷ்ணம் -6.2
விருத்தாசலம் -5.1
காட்டுமன்னார்கோவில் -3.4
லால்பேட்டை -3.2
பெலாந்துரை -2.2
கீழ்செருவாய் -2
மேமாத்தூர் -2
Related Tags :
Next Story