இன்னும் 2 ஆண்டுகளில் பெங்களூருவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்க தயார் முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
இன்னும் 2 ஆண்டுகளில் பெங்களூருவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியை ஒதுக்க அரசு தயாராக உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு விதானசவுதாவில் பெங்களூரு தொலை நோக்கு திட்டம் 2020-22-ம் ஆண்டுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-
பெங்களூரு தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். நகரத்தின் வளமான வரலாறு, பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாத்தல் மட்டுமின்றி, அடுத்த தலைமுறையினருக்கு விரைவாக கொண்டு செல்ல வேண்டும். இதற்காக தான் 2020-22-க்கு வரை பெங்களூரு தொலை நோக்கு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த 2 ஆண்டுகளுக்குள் பெங்களூரு நகரம் உலக தரத்தில் சிறந்த மாநகரமாக மேம்படுத்தப்படும். பெங்களூரு தொலை நோக்குத் திட்டம், இதற்கு ஒரு முக்கியமானதாகும்.
பெங்களூருவின் வளர்ச்சியில் நான் மட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடியும் அக்கறை கொண்டுள்ளார். பெங்களூரு தகவல், உயிரி தொழில் நுட்பங்களின் தலைநகரமாக விளங்குகிறது. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க பேட்டரி வாகன போக்குவரத்து ஊக்குவிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் எந்த தங்கும் தடையும் இன்றி கட்டுமான பணிகள் விரைவாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திடக்கழிவு மேலாண்மை ஊக்குவிக்கப்படும். பெங்களூருவை குப்பை இல்லாத மாநகரமாக மாற்றுவதே அரசின் குறிக்கோளாகும். அதன்படி, குப்பை இல்லாத நகராக பெங்களூரு மாற்றப்படும். பசுமையான பெங்களூருவை உருவாக்குவதும் அரசின் திட்டமாகும். இதற்காக லால்பாக், கப்பன்பூங்கா ஆகியவை மேம்படுத்தப்படும். ஏரிகள் புனரமைக்கப்படுவதுடன், பூங்காக்களை விரிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான சேவைகள் அதிவிரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக பெங்களூரு நகரை மேம்படுத்துவதில் எனது தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறது. பொருளாதார ரீதியாகவும், அரசுக்கு பெங்களூரு நகரம் தான் கைகொடுத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்னும் 2 ஆண்டுகளுக்குள் பெங்களூருவில் உள்கட்டமைப்பு உள்பட அனைத்து வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படும். அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவும் அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரிகள் அசோக், பைரதி பசவராஜ், கோபாலய்யா, சுதாகர், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story