மந்திரிக்கு பில்லி சூனியம் வைத்த 2 பேர் கைது


மந்திரிக்கு பில்லி சூனியம் வைத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2020 5:23 AM IST (Updated: 18 Dec 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி ஏக்நாத் ஷிண்டேக்கு பில்லி சூனியம் வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஏக்நாத் ஷிண்டே. இவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பால்கர் மாவட்டம் விக்ரம் காட் தாலுகா பவர்பாடா கிராமத்தில் உள்ள வீட்டில் பில்லி சூனியத்தில் 2 பேர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் புகைப்படத்தை வைத்து பில்லி சூனிய வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கிருஷ்ணா பாபு குர்குட் (வயது40), சந்தோஷ் வர்தே(39) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது பில்லி சூனிய தடுப்பு சட்டம் மற்றும் மேலும் சில சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை ஜவகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பாக மந்திரிக்கு எதிரான அரசியல் சதி கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story