விக்கிரமசிங்கபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாரான கரும்புகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விக்கிரமசிங்கபுரத்தில் பயிரிடப்பட்டு உள்ள கரும்புகள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான இங்கு சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது.
ஒரு ஆண்டு பயிரான கரும்புகள் தற்போது நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. பொங்கல் பண்டிைகயை முன்னிட்டு, கரும்புகளை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவதற்கு விவசாயிகள் தயாராக உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
அனவன்குடியிருப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நெல் பயிரிட்டு வந்தோம். பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்புகளை வெளி மாவட்டங்களில் இருந்தே வியாபாரிகள் வாங்கி வந்தனர். தற்போது இங்கு பயிரிடப்படும் கரும்புகள் 7 அடி உயரத்துக்கும் அதிகமாக நன்கு வளர்கிறது.
இதனால் ஏராளமான வியாபாரிகள் பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்வதற்கு முன்பணம் கொடுத்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாக கரும்புகளை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவோம். வனவிலங்குகளிடம் இருந்து கரும்புகளை பாதுகாப்பதற்காக தோட்டத்திலேயே பரண் அமைத்து இரவில் தங்கியிருந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story