மீனவர்கள் வலையில் சிக்கிய ஆளில்லா விமானம் போலீசில் ஒப்படைத்தனர்
கடலில் மீன் பிடித்தபோது மீனவர்கள் வலையில் ஆளில்லா விமானம் சிக்கியது. அது பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் ‘மாடல் டார்கெட்’ என்பது கடலோர காவல்படை விசாரணையில் தெரியவந்தது.
புதுச்சேரி,
முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்தவர் சுதாகர் என்கிற நாகலிங்கம் (வயது 48). இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11-ந் தேதி 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான மரக்காணத்தில் இருந்து 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடந்த 15-ந் தேதி மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர்களது வலையில் ஆளில்லா விமானம் ஒன்று சிக்கியது. இதுபற்றி கடலோர காவல் படையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலில் இருந்து அந்த மீனவர்கள் நேற்று காலை தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு திரும்பினர். தங்களது வலையில் சிக்கிய ஆளில்லா விமானத்தை கடலோர காவல்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், இந்திய கடலோர காவல்படையினர், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் அங்கு வந்து அந்த விமானத்தை பார்வையிட்டனர்.
அந்த விமானம் விமானப்படை, கப்பல் படை, ராணுவம் ஆகியவற்றில் குறிப்பிட்ட இலக்கை தாக்குவதற்கான பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் ‘மாடல் டார்கெட்’ என்பது தெரியவந்தது. ஆளில்லா விமானத்தை பார்க்க தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்த மீனவர்களும் ஏராளமான அளவில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மீனவர்கள் வலையில் சிக்கிய ஆளில்லா விமானத்தை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க உள்ளதாக புதுவை கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story