தமிழகத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி - அர்ஜூன் சம்பத் பேட்டி
தமிழகத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
தென்காசி,
தென்காசி நகர இந்து முன்னணி முன்னாள் தலைவர் குமார் பாண்டியனின் 14-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று அவரது வீட்டுக்கு வந்தார். அங்கு குமார் பாண்டியனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. அவற்றை மீட்க வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று கூறி தமிழகத்தில் தீவிரவாதத்திற்கு தி.மு.க. களம் அமைத்து கொடுக்கிறது. எனவே தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தை தடை செய்ய வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை கொண்டு வருகிறார். இதன்மூலம் தமிழகத்தை தெய்வ தமிழகமாக மாற்ற அவர் முயற்சி செய்கிறார். தென்மாவட்டங்களில் திராவிட இயக்கங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. ரஜினிகாந்த் வருகை தென்மாவட்டங்களில் மிகுந்த வளர்ச்சியை கொண்டு வரும். மிகப்பெரிய நல்ல திட்டங்களை அவர் செயல்படுத்துவார். ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் ஆதரவு அளிப்பது நல்ல திருப்பம்.
வருகிற 31-ந் தேதி ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கிறார். நாங்கள் அவருக்கு ஆதரவு அளிக்கிறோம். அவரது போராட்ட களத்தில் நாங்களும் வீரர்கள். அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் ஆன்மிக அரசியல். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்.
31-ந் தேதி அரசியலில் ஒரு புயல் கிளம்புகிறது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி சார்பில் குமார் பாண்டியனின் நினைவுதினம் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு அனுசரிக்கப்பட்டது. இதில் சிவசேனா மாநில துணைத்தலைவர் புலவஞ்சி போஸ், இளைஞரணி மாநில துணைத்தலைவர் திருமுருக தினேஷ், இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் சக்தி பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், அகில இந்திய தலைவர் செஞ்சி ராஜா, இந்து முன்னேற்ற கழக மாநில அமைப்பாளர் லோட்டஸ் மணிகண்டன், அகில பாரத இந்து மக்கள் அமைப்பு நிறுவன தலைவர் சிவகுமார், இந்து சாம்ராஜ்ய நிறுவன தலைவர் சக்திவேல், ஸ்ரீராம்சேனா கட்சி மாவட்ட தலைவர் ரவி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story