மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இறந்தவர் உடலுடன் சாலை மறியல் தொட்டியம் அருகே பரபரப்பு
தொட்டியம் அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஒரு சமுதாய மக்கள், இறந்தவரின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொட்டியம்,
தொட்டியம் காந்திநகர் காலனியை சேர்ந்த இரண்டு சமுதாய மக்களுக்கு அரங்கூர் செல்லும் வழியில் கங்காணி தோட்டம் அருகில் 1.35 ஏக்கர் அளவில் மயானம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த மயானத்தை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அங்கு செல்லும் வழியை மறித்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காந்தி நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி ரத்தினம் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்லும் போது அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கும், குறிப்பிட்ட சமுதாய பொதுமக்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
உடலை வைத்து போராட்டம்
உடனே அந்த சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சடலத்துடன் தொட்டியம் அரங்கூர் சாலையில் திடீர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், வருவாய் ஆய்வாளர் ரகுநாத், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு அவர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மயான ஆக்கிரமிப்பு விரைவில் அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story