ராமநாதபுரம் அருகே நீர், நிலவள திட்டத்தின் கீழ் புத்தேந்தல் மாதிரி கிராமமாக தேர்வு
ராமநாதபுரம் அருகே நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் புத்தனேந்தல் கிராமம் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டது.
மாதிரி கிராமம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழ்வைகை உபவடிநிலப் பகுதி கிராமங்களில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை ஒருங்கிணைப்பு துறையாக வேளாண்மைத் துறை நியமிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் நீர்வள நிலவள திட்டம் உலக வங்கியின் விதிமுறைப்படி வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண்மை பல்கலைக் கழகம், கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகம் வேளாண் விற்பனைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 8 துறைகள் மற்றும் 2 பல்கலைக்கழகம் இணைந்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
புத்தேந்தல் மாதிரி கிராமத்தில் வேளாண்மைத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து நலத்திட்ட முகாம் நடத்தின. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஏஞ்சலா தலைமையில் உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் கால்நடை மருத்துவர் சாரதா மருத்துவக்குழு மூலம் 85 பசுமாடுகளுக்கும், 15 வெள்ளாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டன. 20 பசுமாடுகளுக்கும், 25 வெள்ளாடுகளுக்கும் குடற்புழு நீக்கமும், 6 பசுமாடுகளுக்கு சினை பரிசோதனையும், 200 வெள்ளாடுகளுக்கு பி.பி.ஆர் தடுப்பூசியும் மற்றும் 100 பசுமாடுகளுக்கு தாது உப்பு கலவையும் வழங்கப்பட்டது.
பயிர்பாதுகாப்பு
வேளாண்மைத்துறை அலுவலர்கள் புத்தேந்தல் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களுக்கு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை எடுத்துரைத்தனர். நெல் அறுவடைக்குப் பிறகு மாசி பட்டத்தில் பருத்தி சாகுபடியும், வரிசை விதைப்பு முறைப் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.
கால்நடை மருத்துவ முகாமிற்கு வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா, புத்தேந்தல் மாதிரி கிராம முதன்மைத்துறை அலுவலர், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப தகவல்களை வழங்கினர்.
Related Tags :
Next Story