சீர்காழியில் பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து லாரி கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சீர்காழியில் பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து லாரி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சீர்காழி,
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, ஈசானிய தெரு, இரணியன் நகர், பணமங்கலம், திருக்கோலக்கா, கோவிந்தராஜ் நகர், உப்பனாற்று கரை, ஆர்.வி.எஸ். நகர், ஸ்ரீ கணபதி நகர், மாரிமுத்து நகர், எம்.ஆர்.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் ஏராளமான பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வந்தன. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என சீர்காழி நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, முதல் கட்டமாக பன்றிகளை அப்புறப்படுத்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். ஆனால் பன்றிகளை வளர்ப்பவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று சீர்காழி நகராட்சி சார்பில் மதுரையில் இருந்து பன்றிகள் பிடிப்பவர்களை வரவழைக்கப்பட்டு பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
லாரி கண்ணாடி உடைப்பு
அதனை தொடர்ந்து பன்றிகள் பிடிப்பவர்கள் நேற்று தென்பாதி உப்பனாறு ஆற்றங்கரையில் சுற்றித்திரிந்த ஒரு பன்றியை பிடித்துக் கொண்டு, பன்றிகளை வளர்க்கும் காட்டு நாயக்கன் தெரு செல்ல முற்பட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் பன்றிகளை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரியின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதனை தொடர்ந்து சீர்காழி நகராட்சி அதிகாரிகள் வாகனத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story