விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
செப்டம்பர் மாதம் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அறிவிப்பு
செப்டம்பர் மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிருக்கு பயிர் காப்பீடு வழங்கப்படாது என்றும், அக்டோபர், நவம்பர், மாதத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெம்பக்கோட்டையில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி கூறியதாவது:-
வருடந்தோறும் செப்டம்பர் மாதம் விவசாயிகள் அடங்கல் வாங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாங்கி இருந்தால் இந்த அடங்கல் செல்லாது என திருப்பி அனுப்புகின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
விவசாயிகள் அனைவரும் செப்டம்பர் மாதம் அடங்கல் வாங்கி இருப்பதால் அதனை வைத்து பயிர் இழப்பீட்டு தொகை பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 2021-ம் ஆண்டில் காப்பீட்டு பருவம் குறித்து விவசாயிகளுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். செப்டம்பர் மாதம் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்க விவசாயத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாய துறையின் அலட்சியப் போக்கை கண்டித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும்” என்றார்.
போராட்டத்தில் விஜயகரிசல்குளம் விவசாய சங்க தலைவர் காளிராஜ், கோட்டைப்பட்டி தலைவர் துரைராஜ் ஆறுமுகம் உள்ளிட்ட விவசாயிகள் பேசினர். தோட்டக்கலைத் துறை அலுவலர் ஜோதிபாசு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டுச் சென்றனர்.
Related Tags :
Next Story