ஜோலார்பேட்டை பகுதியில் மினி கிளினிக்; அமைச்சர்கள் திறந்து வைத்தனர்


மினி கிளினிக்கை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் திறந்து வைத்தபோது
x
மினி கிளினிக்கை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் திறந்து வைத்தபோது
தினத்தந்தி 18 Dec 2020 10:09 AM IST (Updated: 18 Dec 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் திறந்து வைத்தனர்.

மினி கிளினிக்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 அம்மா மினி க்ளினிக்குகள் அமைக்கப்படுகிறது. இதனையொட்டி முதற்கட்டமாக ஜோலார்பேட்டையில் உள்ள இடையம்பட்டி, பொன்னேரி, திருப்பத்தூர் அருகே உள்ள விஷமங்கயம், மாடப்பள்ளி, பெருமாப்பட்டு, பூங்குளம் ஆகிய 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் பி.சுமதி வரவேற்றார். போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன், திருப்பத்தூர் தலைமை மருத்துவ அலுவலர் எஸ்.திலீபன், ஜோலார்பேட்டை நகர செயலாளர் எஸ்.பி.சீனிவசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இடையம்பட்டி, மற்றும் பொன்னேரி பகுதியில் அமைந்துள்ள அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தனர். அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

தரம் உயர்த்தப்படும்
தமிழகத்தில் மொத்தம் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டத்திற்கு மொத்தம் 106 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மட்டும் 46 மினி கிளிக்குகள் திறக்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 14 மினி கிளினிக்குகள் திறக்கப்படுகிறது. மேலும் இடையம்பட்டி மினி கிளினிக் கூடிய விரைவில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்படும். அதேபோன்று பொன்னேரியில் உள்ள துணை சுகாதார நிலையம் விரைவில் ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஊட்டச்சத்து பெட்டகம்
இதனையடுத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், வருவாய்த்துறை சார்பில் முதியோர் உதவித் தொகை, கூட்டுறவு துறை சார்பாக பங்கு ஈவு தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஆர்.வாசுதேவன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கே.சி.அழகிரி, ஆர்.ரமேஷ், ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) மீனாட்சி மற்றும் அரசு டாக்டர்கள் சுமன், புகழேந்தி, வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவகுமார், மகேஷ், சுகாதார ஆய்வாளர் கோபி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story