விடுதி காப்பாளருக்கு பணியிட மாறுதல் வழங்கக்கோரி ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் மீது தாக்குதல்; போலீசார் விசாரணை


விடுதி காப்பாளருக்கு பணியிட மாறுதல் வழங்கக்கோரி ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் மீது தாக்குதல்; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Dec 2020 5:33 AM GMT (Updated: 18 Dec 2020 5:33 AM GMT)

விடுதி காப்பாளருக்கு பணியிட மாறுதல் வழங்கக்கோரி ஆதிதிராவிட நலத்துறை கண்காணிப்பாளரை தாக்கிய ஓய்வுபெற்ற ஆதிதிராவிட நலவிடுதி வார்டனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணியிட மாறுதல் வழங்கக்கோரி...
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக ராஜூ (வயது 40) என்பவர் பணியாற்றி வருகிறார். இங்கு நேற்று மதியம் 2 மணி அளவில் வேலூர் சத்துவாச்சாரி தென்றல் நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆதிதிராவிட நலவிடுதி வார்டன் கங்காதரன் (70) வந்தார். அவர் அங்கு பணியில் இருந்த ராஜூவிடம் வாணியம்பாடி ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் காவலராக பணிபுரிந்து வரும் பெண்ணுக்கு, குடியாத்தம் தாலுகா அகரம்சேரி ஆதிதிராவிடர் மாணவியர் விடுதிக்கு பணியிட மாறுதல் வழங்குவது தொடர்பாக பேசி உள்ளார்.

அதற்கு ராஜூ பணியிட மாறுதல் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இருந்து இதுவரை எவ்வித கடிதமும் வரவில்லை. அங்கிருந்து கடிதம் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதனை ஏற்காத கங்காதரன் கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரம் அடைந்த கங்காதரன் திடீரென ராஜூவை சரமாரியாக தாக்கி உள்ளார். அதைக்கண்ட மற்ற ஊழியர்கள் கங்காதரனை தடுத்துள்ளனர். அதையடுத்து அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

போலீசார் விசாரணை
இதுகுறித்து ராஜூ உடனடியாக மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் தெரிவித்தார். நடந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கலெக்டர் கூறினார். அதைத்தொடர்ந்து ராஜூ, சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆதிதிராவிடர் நலவிடுதி காப்பாளருக்கு பணியிட மாறுதல் வழங்குவது தொடர்பாக கண்காணிப்பாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பையும், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story