வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சுமூகமாக பேசி கணிசமான இடங்களை பெறுவோம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி


வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சுமூகமாக பேசி கணிசமான இடங்களை பெறுவோம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
x
தினத்தந்தி 18 Dec 2020 11:33 AM IST (Updated: 18 Dec 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சுமூகமாக பேசி கணிசமான இடங்களை கேட்டுப்பெறுவோம் என்று கோபியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

கடத்தூர், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார மசோதா 2020-ஐ சட்டமாக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் கடந்த 14-ந் தேதி முதல் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையத்தில் ஏர் கலப்பையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். போல்...

விவசாயிகளை அடிமைப்படுத்துவதற்குத்தான் இந்த வேளாண் திருத்த சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் இலவச மின்சாரம், 100 நாள் வேலைத்திட்டம் அனைத்தையும் ரத்து செய்து விடுவார்கள். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது. விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு விட்டார்கள். நான் எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய மந்திரி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து விட்டேன். எனக்கு பதவி ஆசை கிடையாது. ஏழை, எளிய மக்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது. மத்திய அரசை தூக்கி எறியும் காலம் விரைவில் வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கணிசமான இடங்கள்

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி தான் கட்சியைத் தொடங்குவார். ஏன் என்றால் அன்றைக்கு தான் முட்டாள்கள் தினமாகும். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்தால் அதிக பாதிப்பு அ.தி.மு.க.வுக்குத்தான் ஏற்படும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் சுமூகமாக பேசி, கணிசமான இடங்களைப் கேட்டுப்பெறுவோம். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. அவருடைய செல்வாக்கே தனியானது. வேல் யாத்திரை நடத்தினாலும், எத்தனை கோடி செலவு செய்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் நல்லசாமி, சத்தி நகர காங்கிரஸ் தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், வட்டார தலைவர் சி.ஆர்.ஆறுமுகம், பவானிசாகர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் தினேஷ், ஈரோடு மாநகர தலைவர் ஈ.பி.ரவி, உதயகுமரன் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




Next Story