யார், யாருடன் கூட்டணி அமைத்தாலும் பிரச்சினை இல்லை சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் கைகோர்த்து போட்டியிடுவோம் சீமான் பேட்டி


யார், யாருடன் கூட்டணி அமைத்தாலும் பிரச்சினை இல்லை சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் கைகோர்த்து போட்டியிடுவோம் சீமான் பேட்டி
x
தினத்தந்தி 18 Dec 2020 12:02 PM IST (Updated: 18 Dec 2020 12:02 PM IST)
t-max-icont-min-icon

யார், யாருடன் கூட்டணி அமைத்தாலும் பிரச்சினை இல்லை என்றும், சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் கைகோர்த்து போட்டியிடுவோம் என்றும் ஈரோட்டில் சீமான் கூறினார்.

ஈரோடு, 

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி தமிழ் தேச பொதுவுடமை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

குற்றப்பத்திரிகை நகல்

இந்த நிலையில் வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் நேற்று ஈரோடு கோர்ட்டுக்கு வந்தார்கள். அவர்கள் ஈரோடு விரைவு கோர்ட்டு நீதிபதி வடிவேல் முன்பு ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டனர். இந்த வழக்கு விசாரணையை 5-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பிறகு வெளியே வந்த சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மக்களின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக எங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதற்காக கோவை சிறையில் அடைக்கப்பட்டோம். வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி ஈரோடு கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

வேளாண் சட்டங்கள்

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். யார் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அது குறித்தான சிந்தனையும் இல்லை. யார், யாருடனும் கை கோர்க்க முயன்றாலும், நாங்கள் மக்களுடன் கைகோர்த்து தான் போட்டியிடுகிறோம். யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் எங்களுக்கு பிரச்சினை கிடையாது. நான் முழுமையாக தமிழக மக்களை நம்புகிறேன்.

மக்களிடம் வேளாண் சட்டங்கள் குறித்து தமிழக முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களில் செயற்கையான தட்டுப்பாட்டை மக்களிடத்தில் உருவாக்கி, மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் இந்த சட்டங்களை நாங்கள் எதிர்க்கிறோம். மத்திய வேளாண்மை மந்திரி அல்லது தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசுபவர்களில் யாராவது ஒருவர் வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்க முடியமா? ஒருவர் கூட சட்டத்தை பற்றி விளக்கம் அளிக்கவில்லை. மக்களுடன், விவசாயிகளுடன் சேர்ந்து வேளாண் சட்டங்களை எதிர்க்கிறோம்.

எம்.ஜி.ஆர்.

இந்த அரசு மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் சட்டத்தை கொண்டு வருவது வேதனை அளிக்கிறது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது சரிதான். மொழிவாரி ஆகவும் ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சி அமைப்போம் என கூறிக்கொண்டு எம்.ஜி.ஆர். போன்றவர்களை முன் நிறுத்தி அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல. நாங்கள் பெருந்தலைவர் காமராஜர் வழியிலும், சிவானந்தம் வழியிலும், சிங்காரவேலர் வழியிலும், கக்கன் வழியிலும் நேர்மையான, தூய்மையான அரசியலை முன்னெடுக்கிறோம். அவர்கள் எம்.ஜி.ஆரை முன்நிறுத்த நினைக்கிறார்கள். நாங்கள் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தி உள்ளோம். எங்கள் கோட்பாடு தனி.

இவ்வாறு சீமான் கூறினார்.

சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு கோர்ட்டுக்கு வந்ததால், கோர்ட்டு முன்பு நாம் தமிழர், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் பலர் திரண்டு நின்றார்கள். இதனால் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, சண்முகம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story