தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டி: 2 மாணவிகள் உள்பட 3 பேர் தேர்வு - முதன்மை கல்வி அதிகாரி உஷா தகவல்
தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டிக்கு 2 மாணவிகள் உள்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா தெரிவித்தார்.
கோவை,
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில், பள்ளி மாணவ- மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவித்து பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுத்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில், கலா உத்சவ் என்ற போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கோவையில் இந்த ஆண்டுக்கான கலா உத்சவ் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்று நாடகம், இசை, நடனம், மணல் சிற்பம், ஓவியம், கரகாட்டம், பறையாட்டம் என பல்வேறு பாரம்பரிய கலைகளை செய்து காட்டினர்.
இதில், கல்வி மாவட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நிறைவடைந்து உள்ளன. அந்த முடிவுகள் அடிப்படையில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதியான மாணவ- மாணவிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கோவையை சேர்ந்த 2 மாணவிகள் உள்பட 3 பேர் தேர்வாகி உள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா கூறியதாவது:-
மாநில அளவிலான கலா உத்சவ் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் பங்கேற்க கோவை மாவட்டத்தில் மொத்தம் 18 மாணவ-மாணவிகள் தேர்வாகினர். அதில் பறையாட்டம் பிரிவில் ஒண்டிப்புதூர் பெண்கள் பள்ளி மாணவி அனுஷ்யா முதலிடம் பிடித்தார்.
முப்பரிமாண காண்கலை பிரிவில் மணல் சிற்பம் வடிவமைத்தல் போட்டியில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா முதலிடம், வாய்ப்பாட்டிசை பிரிவில் கோவையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் யஷ்வந்த் முதலிடம் பிடித்தனர். இதன் மூலம் அவர்கள் 3 பேரும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். கோவை மாவட்டத்தில் தேசிய அளவிலான போட்டிக்கு மாணவ- மாணவிகள் தகுதி பெறுவது இதுவே முதல் முறை ஆகும். தொடர்ந்து தேசிய அளவிலான போட்டி, அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 2-வது வாரத்தில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story