காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது


காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2020 7:15 PM IST (Updated: 18 Dec 2020 7:15 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தளியில் உள்ள அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார்.

அதே கல்லூரியில் ஜெகதாப் அடுத்த தாசிகொட்டாய் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 24) என்பவரும் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் தன்னை காதலிக்குமாறு சக்திவேல், தொடர்ந்து அந்த மாணவியை வலியுறுத்தி வந்தார். ஆனால் அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து சக்திவேல், அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து, பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தார்.

Next Story