சாலையோர வியாபாரிகளுக்கு, கடன் வழங்கும் திட்டத்தில் மதுரை மாநகராட்சி சாதனை; மேலும் பலருக்கு வழங்கவும் இலக்கு
சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் மற்ற மாநகராட்சிகளை விட அதிக எண்ணிக்கையில் பயனாளிகளுக்கு கடன் ஒப்புதல் வழங்கி மதுரை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.
பிரதமரின் திட்டம்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி யோஜனா திட்டத்தில், சிறப்பு நுண் கடன் வழங்கும் திட்டம் கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பிணை எதுவும் இன்றி தொழில் முதலீட்டு கடனாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை பயனாளிகள் 1 ஆண்டிற்குள் திருப்பி செலுத்த வேண்டும். கடன் தொகையை உரிய காலத்தில் செலுத்துபவர்களுக்கு 7 சதவீத வட்டி மானியமும், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் தவணை செலுத்தும் போது ஆண்டுக்கு
ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கமும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதாவது, ஏறக்குறைய 30 சதவீதம் அளவுக்கு மானியம் கிடைக்கிறது.
மதுரை மாநகராட்சி
இந்த திட்டத்தில் பயனடையும் சாலையோர வியாபாரிகளின் விண்ணப்பங்கள் மதுரை மாநகராட்சி அலுவலர்கள் மூலம் கள ஆய்வு செய்யப்படுகிறது. அதாவது, கடன் பெற விண்ணப்பிக்கும் வியாபாரி, குறிப்பிட்ட இடத்தில் வியாபாரம் செய்கிறாரா என்பது ஆய்வு செய்யப்பட்டு, அவர் கடன் பெற தகுதியானவர் என்றால் அவருக்கு கடன் வழங்கலாம் என்று வங்கிக்கு மதுரை மாநகராட்சி பரிந்துரை கடிதம் வழங்குகிறது. அதனடிப்படையில், வங்கி அந்த வியாபாரிக்கு கடன் வழங்குகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் அதிக அளவில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ள மாநகராட்சியாக மதுரை முதலிடத்தில் உள்ளது. மதுரை மாநகராட்சியின் புள்ளி விவர அடிப்படையில் மதுரையில் கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 704 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 7 ஆயிரத்து 649 பேர் மதுரை மாநகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கான கடன் பெற விண்ணப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் மாநகராட்சி அலுவலர்கள் கள ஆய்வு செய்ததில் 3 ஆயிரத்து 958 பேர் கடன் பெற தகுதியானவர்கள் என்று உறுதி செய்யப்பட்டு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஓசூர் கடைசி
மதுரைக்கு அடுத்து, கோவை மாநகராட்சி 3,624 பேருக்கு இந்த கடன் வழங்கி 2-ம் இடத்தில் உள்ளது. கடைசி இடமாக ஓசூர் மாநகராட்சியில் 142 பேருக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநகராட்சியை பொறுத்தளவில் கடன் பெற விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை வெறும் 260 மட்டுமே ஆகும்.
இது குறித்து, மதுரை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் மேலும் பல சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, நகர்ப்புறங்களில் தொழில் நடத்தும் சாலையோர வியாபாரிகள் PMSVNidhi என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார்.
Related Tags :
Next Story