விபத்துகளை தவிர்க்கும் வகையில், கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்கக்கோரி வழக்கு; கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


மதுரை ஐகோர்ட்டு
x
மதுரை ஐகோர்ட்டு
தினத்தந்தி 19 Dec 2020 6:23 AM IST (Updated: 19 Dec 2020 6:23 AM IST)
t-max-icont-min-icon

விபத்துகளை தவிர்க்கும் வகையில் கட்டிடங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை உறுதிப்படுத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அனுமதி பெற வேண்டும்

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நகரில் எந்த ஒரு கட்டிடம் கட்டப்படும்போதும் அதன் வரைபடத்தை நகர் மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் சமர்ப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும். இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் கட்டிட பணிகள் சட்டப்படி முடிக்கப்பட்டு உள்ளனவா என்பதை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இருக்கின்றதா என்பதையும் உறுதிப்படுத்திய பின்பு தான் கட்டிட பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாத கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும், பொருட்சேதமும் ஏற்படுகிறது. கடந்த தீபாவளிக்கு முந்தைய நாள் மதுரை தெற்குமாசி வீதி பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இங்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.

பின்பற்ற வில்லை
இது தொடர்பான விசாரணையின்போது, அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் இந்த கட்டிடங்களுக்கு தடையில்லா சான்றிதழ்களை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இது சம்பந்தமாக கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுபோல நகரில் எண்ணற்ற கட்டிடங்களில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றப்படவில்லை. எனவே கட்டிடங்களில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்று ஆய்வு செய்து அதனை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் தியேட்டர், மால்கள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் தீயணைப்பு கருவிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

நோட்டீஸ்
எதிர்காலத்தில் கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்து, தடையில்லா சான்று வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து தீயணைப்புத்துறை இயக்குனர், மதுரை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Next Story