பாகூர் ஏரியின் மதகு உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது இரவோடு இரவாக வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற்றம்
தொடர் மழையால் பாகூர் ஏரி நிரம்பி வழிந்த நிலையில் மதகு உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் இரவோடு இரவாக வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினார்கள்.
பாகூர்,
புதுச்சேரியின் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி உள்ளது. 3.6 மீட்டர் உயரமுள்ள இந்த ஏரியில் 194 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். பருவமழை காலத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக இந்த ஏரிக்கு தண்ணீர் வரும்.
ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் பாகூர், செலியமேடு, குடியிருப்புபாளையம், அரங்கனூர், குருவிநத்தம் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் நிவர், புரெவி புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பங்காரு வாய்க்கால் வழியாக ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வந்தது. கடந்த வாரம் 3 மீட்டரை நீர்மட்டம் எட்டியது. ஏரியில் அதிகபடியாக தண்ணீர் தேக்க கலிங்கல் பகுதியில் பலகைகள் வைக்கப்பட்டது. அதன்பிறகு மழை பெய்யாததால் நீர்மட்டம் அப்படியே இருந்தது.
தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் பாகூர் ஏரிக்கு நீர்வர தொடங்கியுள்ளது. இதையடுத்து ஏரியின் நீர்மட்டம் அதிகபட்ச உயரத்தை எட்டி நிரம்பி வழிகிறது. உபரிநீர் அரங்கனூர் கலிங்கள் வழியாக வெளியேற்றப்பட்டது. ஏரியின் தற்போதைய நீர்இருப்பு மூலம் அடுத்த 4 மாதங்களுக்கு விவசாய பாசனத்துக்கு பயன்படுத்தலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பாகூர் ஏரிப்பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏரியை பொதுப்பணித்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில், பாகூர் ஏரியின் கரைமேடு மதகில் நேற்று இரவு 8 மணியளவில் நீர் கசிவு ஏற்பட்டது. திடீரென மதகு உடைந்து தண்ணீர் வெளியேறி கரைமேடு கிராமத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வேறு வழியின்றி இரவோடு இரவாக தங்கள் வீடுகளை காலி செய்து கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு சென்றனர்.
பாகூர் ஏரியின் மதகில் உடைப்பு ஏற்பட்டது குறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று உடைப்பு ஏற்பட்ட மதகை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏணி மூலம் இறங்கி மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து கடலூர் தாசில்தார் பலராமன் மற்றும் வருவாய் அதிகாரிகள் கரைமேடு கிராமத்திற்கு சென்று அந்த மதகை பார்வையிட்டு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
Related Tags :
Next Story