சட்டசபை தேர்தலையொட்டி முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரசாரம் தொடக்கம்


சட்டசபை தேர்தலையொட்டி முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரசாரம் தொடக்கம்
x
தினத்தந்தி 19 Dec 2020 6:52 AM IST (Updated: 19 Dec 2020 8:18 AM IST)
t-max-icont-min-icon

2021 சட்டசபை தேர்தலையொட்டி இன்று முதல் எனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து தேர்தல் பிரசாரம் தொடங்குகிறேன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், பூத் கமிட்டி அமைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். மேலும், தமிழக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்று நிர்வாகிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்துஎடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

லாரி உரிமையாளர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வேகக்கட்டுப்பாட்டு மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் வாங்க வேண்டும் என்று எந்தவித நிர்பந்தமும் செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சொல்லியதாக தவறான கருத்து பரப்பப்படுகிறது. அந்த கருத்து உண்மையில்லை. 10 நிறுவனங்களில் எந்த நிறுவனங்களில் வேண்டுமானாலும் ஜி.பி.எஸ். கருவிகள் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை உயர்த்த மேலும் 6 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு தான் சொல்லுகிறது. மாநில அரசு ஏதும் சொல்லவில்லை.

அதேசமயம், மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.பி.எஸ். கருவியின் விலையை தான் மாநில அரசு பின்பற்றுகிறது. வேகக் கட்டுப்பாட்டு கருவியின் தரத்தை உறுதி செய்வதற்காக தரமான நிறுவனங்களில் உதிரி பாகங்களை வாங்குமாறு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்துள்ளார். சுற்றறிக்கை தான் அனுப்பி வைத்துள்ளோம். நடைமுறை படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

2021 சட்டசபை தேர்தலையொட்டி எனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நாளை (அதாவது இன்று) முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். ஏனென்றால், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் குறைவாக உள்ளது. மேலும், தமிழக சட்டசபை தேர்தலில் நிறைய இடங்களில் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால் அடிக்கடி இங்கு வரமுடியாது.

இதனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளின்படி எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகையில் சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story