மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன்: முதல்-அமைச்சர் என்ற எண்ணத்தில் நான் இருந்ததே கிடையாது; அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


முதல்-அமைச்சர் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை பார்வையிட்டபோது
x
முதல்-அமைச்சர் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை பார்வையிட்டபோது
தினத்தந்தி 19 Dec 2020 10:07 AM IST (Updated: 19 Dec 2020 10:07 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் என்றும், முதல்-அமைச்சர் என்ற எண்ணத்தில் நான் இருந்ததே கிடையாது என்றும் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அம்மா கிளினிக் திறப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமங்களில் இருந்து நகரம் வரை ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதோடு நிற்காமல் தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு வருகிறது. கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு அந்த பகுதியிலேயே, அம்மா மினி கிளினிக் தொடங்குகின்றபோது, அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை நாடி தங்களுடைய நோயை குணப்படுத்தி கொள்ளலாம். இங்கே ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்து உரிய மருத்துவ சிகிச்சையை அளிப்பார்கள்.

மக்களுக்கு சேவை
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளும் அம்மா மினி கிளினிக்கிலும் வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எளிதாக மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏழை மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் இதை அமைக்க வேண்டும் என்று நான் ஆணையிட்டு, அதன்படி முத்துநாயக்கன்பட்டியை தேர்ந்தெடுத்து அமைத்திருக்கிறார்கள்.

நம்முடைய மாவட்டம் தான் முதல்-அமைச்சரின் மாவட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது. வேறு மாவட்டத்தில் இருப்பவர் முதல்-அமைச்சராக இருந்தால் சேலம் முத்துநாயக்கன்பட்டிக்கு வர முடியுமா? நான் ஏற்கனவே பலமுறை இங்கு வந்து கூட்டங்களில் பேசி சென்றுள்ளேன். அன்றைக்கு இருந்த பழனிசாமியாகவே இப்போதும் உள்ளேன். என்னை பொறுத்தவரை உங்களுக்கு பணி செய்கின்ற பொறுப்பைத்தான் எனக்கு தந்திருக்கிறார்கள். நான் முதல்-அமைச்சர் என்ற எண்ணத்தில் இருந்ததே கிடையாது, இருக்கப்போவதும் இல்லை. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய உயர்ந்த பணியை என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். அதை சிந்தாமல், சிதறாமல், நீங்கள் நினைப்பதை நிறைவேற்றுகிற முதல்-அமைச்சராக நான் பணியாற்றுவேன். அந்த அடிப்படையில்தான், கிராமத்தில் பிறந்து, வளர்ந்த காரணத்தினால், கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள ஏழைகள் மருத்துவ வசதி பெறுவதற்கு போராடி கொண்டிருந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் அம்மா மினி கிளினிக் நான் கொடுத்திருக்கிறேன்.

அனுபவம் தான் பிரதிபலிக்கும்
என்னுடைய சிறு வயதில், உடல் நிலை சரியில்லாதபோது, எங்கள் கிராமத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள எடப்பாடி அல்லது 24 கி.மீ. தொலைவிலுள்ள பவானிக்கு தான் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட நிலை இருக்கக்கூடாது. நான் பட்ட கஷ்டத்தை தமிழகத்தில் ஏழைகள் எவரும் பெறக்கூடாது. அவர்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக கிராமப்புறங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். சிறு வயதில் உணவுக்காக கஷ்டப்பட்டதை உணர்ந்து, அவர் முதல்-அமைச்சரானவுடன் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து வயிறார உணவு கொடுத்து ஏழை குழந்தைகளை கல்வி கற்க செய்தார். அனுபவம் தான் காரணம். அனுபவம் தான் பிரதிபலிக்கும். அந்த அனுபவம் தான் இப்போதும் பிரதிபலித்திருக்கிறது. நானும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்தவன். அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக மருத்துவ படிப்பு என்பது இயலாத நிலையில் இருந்தது. அதாவது எட்டாக்கனியாக இருந்தது. அரசுப் பள்ளியில் படிக்கும் 41 சதவீதம் மாணவர்களுக்கு கடந்த ஆண்டில் வெறும் 6 மருத்துவ இடங்கள் தான் கிடைத்தது. ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்று அடிப்படையாக உணர்ந்த காரணத்தால், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்து நிறைவேற்றினேன். இப்போது, 313 இடங்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் கிடைத்திருக்கிறது. பல் மருத்துவக்கல்லூரியில் 87 இடங்கள் கிடைத்திருக்கிறது.

435 மருத்துவ இடங்கள்
தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 2020-21-ம் ஆண்டில் அந்த பணிகள் நிறைவேறுகின்றபோது, அதில் 1,650 இடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும். அதிலும் ஒரு குறிப்பிட்ட இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்போது, அடுத்த ஆண்டு சுமார் 435 மருத்துவ இடங்கள் அவர்களுக்கு கிடைக்கும். இது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.

கிராமம் முதல் நகரத்தில் இருக்கும் ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் மருத்துவம் படித்துதான் கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு வைத்தியம் செய்யமுடியும். டாக்டர் என்பவர் பொதுவானவர். நகரத்திலே படிக்கின்றவர்கள் வசதி வாய்ப்போடு பிறந்தவர்கள். அவர்கள் கிராமத்திற்கு வருவதற்கு தயங்குவார்கள். ஆனால், கிராம சூழ்நிலையில் வாழ்ந்த ஒருவர் கிராமத்தில் பணியாற்றுவதை பெருமையாக எடுத்து கொள்வார். அந்த அடிப்படையில், கிராம சூழ்நிலையில் வாழ்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பினை படித்து முடித்த பிறகு கிராமத்தில் வந்து பணியாற்றக்கூடிய சூழ்நிலையை நாம் எதிர்காலத்தில் பார்ப்போம். ஆகவே, தமிழக அரசு ஏழை மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுகின்ற அரசு என்பதை தெரிவிக்கிறேன்.

ரூ.9,200 கோடி இழப்பீடு தொகை
விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். டிராக்டர் வாங்குவதற்கு 50 சதவீத மானியம். பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.9 ஆயிரத்து 200 கோடி இழப்பீடு தொகையாக பெற்றுத்தந்த ஒரே அரசு தமிழ்நாடு அரசு. பொழிகின்ற மழைநீர் ஒரு சொட்டு நீர்கூட வீணாக கூடாது என்பதற்காக நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் முழுக்க, முழுக்க விவசாயிகள் பங்களிப்புடன் பல்வேறு ஏரிகள் தூர்வாரப்பட்டதால் நீர் நிரம்பியுள்ளது. ஆகவே, தேசிய அளவில் நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று தேசிய விருதை மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

அதுபோல், மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு, துறைகள் வாரியாக அ.தி.மு.க. அரசு தேசிய விருதுகள் பெற்றுக் கொண்டிருப்பது மு.க.ஸ்டாலின் கண்ணுக்கு மட்டும் தெரியவில்லை. நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சரியான திட்டங்களை நிறைவேற்றுவதால் அவை மக்களை சென்றடைகிறது. தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களின் நிலைகளுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு நமக்கு தேசிய விருது வழங்கியுள்ளார்கள். பாராட்ட மனமில்லாவிட்டாலும் அவதூறாக பேசாமல் இருந்தாலே நல்லது.

எண்ணற்ற திட்டங்கள்
உங்கள் மாவட்டத்தை சேர்ந்த என்னை இங்குள்ள அனைவரும் முதல்-அமைச்சராக பார்த்து கொண்டிருக்கிறீர்கள். நான் முதல்-அமைச்சராக எப்போதும் நினைத்ததுகூட கிடையாது. இது ஒரு பதவி, இந்த பதவியின் மூலம் நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற எண்ணத்தில்தான் நான் இருக்கிறேன். ஆனால், என் முன் நிற்பவர்கள் அனைவரையும் முதல்-அமைச்சராக பார்க்கின்றேன். ஆகவே, நீங்கள் கொடுத்த இந்த பணியை சிறப்பான முறையில் செய்து, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்ற விதமாக செயல்படுவேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கலந்து கொண்டவர்கள்
விழாவில், மாவட்ட கலெக்டர் ராமன், சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுந்தரபாண்டியன், ஓமலூர் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் முருகன், பாகல்பட்டி கூட்டுறவு தலைவர் மணி, தோளூர் கூட்டுறவு வங்கி தலைவர் ராமசாமி, நல்லாகவுண்டம்பட்டி கூட்டுறவு தலைவர் சின்னதுரை, மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட இயக்குனர் சேட்டு, ஒப்பந்ததாரர் லதா ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ரவீந்திரகுமார், ஒப்பந்ததாரர்கள் தருமன், விஜயகிருஷ்ணன், தோளூர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் முத்து, முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாரதாராஜா, சொர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் செல்வராஜூ, ஜெயலலிதா பேரவை மாநகர் மாவட்ட இணை செயலாளர் செங்கோட்டையன், சுப்ரமணியநகர் கூட்டுறவு வங்கி தலைவர் ராமராஜ், சூரமங்கலம் பகுதி மாணவர் அணி தலைவர் நடராஜ், மேற்கு ஒன்றிய பொருளாளர் மெய்யப்பன், எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய இணை செயலாளர் நேரு, ஒன்றிய கவுன்சிலர் ராஜமாணிக்கம், விவசாய அணி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, அய்யம்பெருமாம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜோதி மணிவண்ணன், மீனவர் அணி ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், எம்.ஜி.ஆர். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story