மசினகுடியில், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை - வனத்துறையினரை தாக்க முயன்றதால் பரபரப்பு
மசினகுடியில் ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. அதை விரட்ட முயன்ற வனத்துறையினரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி வனப்பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஒரு காட்டு யானை வெளியே வந்தது. பின்னர் அந்த யானை ஆச்சக்கரை பகுதி வழியாக மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகுந்தது.
இது குறித்து தகவலறிந்த சிங்காரா வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து மா மரக்கிளையை முறித்து தின்றது.
அப்போது அங்கு நின்ற நாய்கள் காட்டு யானையை பார்த்து குரைத்தது. இதனால் கோபம் அடைந்த காட்டு யானை ஒரு வீட்டில் வைத்திருந்த வளர்ப்பு நாய் கூண்டை துதிக்கையால் தட்டி விட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து வனத்துறையினரும் காட்டு யானையை துரத்தினார்கள்.
அப்போது சாலையில் சென்ற காட்டு யானை, ஓரத்தில் நிறுத்தி இருந்த ஒரு ஜீப்பை தாக்க முயன்றது. உடனே வனத்துறையினர் சத்தம் போட்டபடி அந்த யானையை துரத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த காட்டு யானை திரும்பி வந்து வனத்துறையினரை தாக்க முயன்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே சுதாரித்துக்கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பித்ததால், அந்த இடத்தில் இருந்து சென்ற காட்டு யானை மசினகுடி வனத்துறை சோதனை சாவடி வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே வனத்துறை யினர் நிம்மதி அடைந்தனர்.
குன்னூர் அருகே உள்ள முத்தநாடு என்ற பகுதியில் 5 காட்டு யானைகள் நுழைந்தன. அவைகள் அங்கு இருந்த ரேசன் கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமையை எடுத்து சாப்பிட்டதுடன் கீழே போட்டு சேதப்படுத்தியது. அத்துடன் அந்த பகுதிஉள்ள வீட்டின் கதவுகளையும் உடைக்க முயற்சி செய்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. எனவே இந்த காட்டு யானைகளை கண்காணித்து துரத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story