வேளாண் திருத்த சட்டத்துக்கு எதிராக அப்பாவி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றன - வானதி சீனிவாசன் பேச்சு
வேளாண் திருத்த சட்டத்துக்கு எதிராக அப்பாவி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றன என்று தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறினார்.
பேரூர்,
வேளாண் திருத்த சட்டங்களை ஆதரித்து, கோவை பா.ஜ.க. சார்பில் டிராக்டர் விழிப்புணர்வு பேரணியை, கோவை பேரூர் பட்டீசுவரர் கோவில் முன்பு பா.ஜனதாவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சீரிய எண்ணத்தில் இந்த வேளாண் திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்துக்காக இந்தத் திட்டத்தை எதிர்க்கிறது. மேலும், கடந்த காலங்களில் இந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவை ஏற்றுக் கொண்டு, தேர்தல் அறிக்கையாக மக்களிடம் வெளியிட்ட எதிர்க்கட்சிகள், தற்போது பா.ஜ.க. இந்த வேளாண் திருத்த சட்ட மசோதா கொண்டு வந்ததை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அப்பாவி விவசாயிகளையும் தூண்டிவிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த நாடகத்தை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பா.ஜனதாவினர் அனைத்து கிராமங்களுக்கும் சென்று வேளாண் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அதன்படி, கோவையில் டிராக்டர் மூலமாக பா.ஜனதா மகளிரணி மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, விவசாயிகளை சந்தித்து வருகிறோம் என்றார்.
இதைத்தொடர்ந்து, பேரூரிலிருந்து சிறுவாணி மெயின் ரோடு வழியாக காளம்பாளையம், மாதம்பட்டி, பூலுவபட்டி, ஆலாந்துறை உள்ளிட்ட வழியோர கிராமங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தும், கிராம விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலுமயில்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் மாதம்பட்டி கே.தங்கவேலு, மாவட்ட விவசாய அணி தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் அரங்கவரதராஜா, விவசாய அணி துணைத்தலைவர் செந்தில்குமார், குழந்தைவேலு, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story