சின்னசேலம் அருகே, மணிமுக்தா ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு - காளான் பறிக்க சென்றபோது தவறி விழுந்து பரிதாபம்


சின்னசேலம் அருகே, மணிமுக்தா ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு - காளான் பறிக்க சென்றபோது தவறி விழுந்து பரிதாபம்
x
தினத்தந்தி 19 Dec 2020 7:33 PM IST (Updated: 19 Dec 2020 7:33 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே காளான் பறிக்க சென்ற வாலிபர் மணிமுக்தா ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் மணிகண்டன்(வயது 23). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காளான் பறித்துவருவதாக அவரது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் மணிகண்டன் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் காணவில்லை.

இந்த நிலையில் நேற்று மதியம் மணிமுக்தா ஆற்றின் கரையில் கைகள் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் ஒருவர் மூழ்கி இருப்பதை ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து கிராமமக்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தோட்ட பாடி கிராமமக்கள் மணிமுக்தா ஆற்றுக்கு திரண்டு வந்து ஆற்றில் மூழ்கி கிடந்த நபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர் காணாமல் போன மணிகண்டன் என்பதும், காளான் பறிக்க சென்றபோது தவறி ஆற்றுக்குள் விழுந்து தலையில் படுகாயம் அடைந்த மணிகண்டன் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மணிகண்டனின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தகவல் அறிந்து வருவாய் ஆய்வாளர் காந்திமதி, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளிக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story