விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது - ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்களும் மூழ்கின


விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது - ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்களும் மூழ்கின
x
தினத்தந்தி 19 Dec 2020 7:42 PM IST (Updated: 19 Dec 2020 7:42 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்களும் மூழ்கி சேதமடைந்தன.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர், புரெவி புயல்களின் காரணமாக மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இவ்வாறு தேங்கியிருந்த வெள்ளநீர் மெல்ல, மெல்ல வடிய ஆரம்பித்த நிலையில் தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காலையில் இருந்து இரவு வரை விட்டு விட்டு பரவலாக மழை பெய்த நிலையில் நள்ளிரவிலும் சில இடங்களில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து, நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக சாரல் மழை தூறியது.

இந்த தொடர் மழையின் காரணமாக தென்பெண்ணையாறு, பம்பை ஆறு, மலட்டாறு, சங்கராபரணி ஆறு, நரியாறு, வராக நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி மயிலம் பனங் காட்டு ஏரி உள்ளிட்ட சில ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. அதுபோல் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பல்வேறு கிராமப்புறங்களில் உள்ள தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் சாலாமேடு ஏரி முழுமையாக நிரம்பிய நிலையில் அதன் கரை உடைந்ததால் அருகில் உள்ள அபிதா கார்டன், சிங்கப்பூர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். திருவாமாத்தூரில் உள்ள பம்பை ஆற்றின் கரை உடைந்ததால் அருகில் உள்ள அயினம்பாளையம், பாத்திமா நகர் பகுதியில் உள்ள 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள், கொய்யாத்தோப்பு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதுபோல் அனிச்சம்பாளையம் பகுதியில் உள்ள 60 வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள மக்களும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story